கலாநிதி ஜெகான் பெரேரா

நீண்டகால இனநெருக்கடியை இலங்கையின் 75 வது சுதந்திர தினமளவில் தீர்த்துவைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிக்காட்டியிருக்கும் உறுதிப்பாடு ஏனைய விவகாரங்களிலும் நேர்மறையான முன்னேற்றங்களை காண்பதற்கு நம்பிக்கைதரக்கூடிய தளமாக இருக்கமுடியும்.இது நடைமுறை யதார்த்தமாக மாற்றப்படவேண்டிய ஒரு நம்பிக்கையாகும்.இனநெருக்கடியை அரசியல் ரீதியில் தீர்த்துவைப்பதற்கு கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் வரலாறு ஒரு நம்பிக்கையான தோற்றத்தை தரவில்லை.

இனநெருக்கடியை தீர்ப்பதற்கு முயற்சித்து தோல்விகண்ட இலங்கைத் தலைவர்களின் பட்டியல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவில் தொடங்கி தற்போதைய ஜனாதிபதி விக்கிரமசிங்க வரை நீடிக்கிறது.முன்னர் பிரதமராக தலைமைத்துவ பாத்திரத்தை வகித்தவேளை விக்கிரமசிங்க இந்த முயற்சியில் தோல்வி கண்டார்.ஏனைய சமூகங்களின் கோரிக்கைகளை அரைவாசி அளவுக்கேனும் நிறைவேற்றுவதற்கு விட்டுக்கொடுப்பை செய்வதற்கான சாத்தியப்பாட்டுக்கு எதிராக தூண்டிவிடப்பட்ட அரசியல் எதிர்ப்பு அந்த தலைவர்களினால் சமாளிக்கமுடியாத அளவுக்கு பலமானவையாக இருந்தன.

ஆனால்,கடந்த காலத்தைப் போலன்றி இத்தடவை இனநெருக்கடி தீர்க்கப்படக்கூடியதாக இருக்கும் என்று நம்புவதற்கு நான்கு காரணங்கள் இருக்கின்றன.முதலாவது காரணம் மிகவும் முக்கியமானது.பேச்சுவார்த்தை மேசைக்கு ஜனாதிபதி விக்கிரமசிங்கவினால் கொண்டுவரக்கூடிய தலைமைத்துவ ஆற்றலே அதுவாகும்.ஐந்து தடவைகள் பிரதமராக பதவி வகித்த அவர் தற்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்தக்கூடியவராக இருக்கிறார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை அறிமுகப்படுத்தியவரான அவரின் மாமனார் அந்த அதிகாரங்களின் ஆணைப்பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றும் அதிகாரம் ஒன்று மாத்திரமே தன்னிடம் இல்லை என்று சொன்னார். 

ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கு கடந்த வருட பிற்பகுதியில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 21வது திருத்தம் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.அந்த திருத்தத்தின் கீழ் அமைக்கப்படவேண்டிய நிறுவனங்களுக்கு தங்களில் யார்யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இணக்கப்பாடொன்றுக்கு வர இயலாமல் இருக்கும் அடுத்த மட்ட அரசியல்வாதிகள் மத்தியில் காணப்படும் ஐக்கியமின்மை தற்போதைய தருணத்தில் தலைூமத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. 

பொதுமக்களின் அபிப்பிராயத்தை உருப்படியான முறையில் பிரதிபலிக்கமுடியாத வகையில் பாராளுமன்றத்தின் நியாயப்பாடு சிதைக்கப்பட்டுவிட்டமை இரண்டாவது காரணமாகும்.ஜனாதிபதியுடன் சேர்த்து முன்னைய அரசாங்கத்தை வீழ்த்திய போராட்ட இயக்கம் பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டையும் முறைமை மாற்றத்தையும் தேர்தல்களையும் கோரிநின்றது.இது பாராளுமன்றத்தில் உள்ள ஆளும் கட்சி உறுப்பினர்கள் விரைவாக பொதுத்தேர்தலை சந்திக்கவிரும்பாத அளவுக்கு அவர்களின் நீண்டகால திட்டங்களை சீர்குலைத்துவிட்டது.தற்போது அவர்கள் உள்ளூராட்சி தேர்தல்களைக் கூட விரும்பவில்லை என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. 

இத்தகைய பின்புலத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலும் ஜனாதிபதியை எதிர்ப்பதற்கு விரும்பமாட்டார்கள்.முன்கூட்டிய பொதுத்தேர்தல் ஒன்றில் பொதுமக்களின் ஆத்திரத்தில் இருந்து தப்புவதற்கு அவரது நல்லெண்த்திலேயே அவர்கள் தங்கியிருக்கிறார்கள்.இன்னும் மூன்று மாதங்களுக்குள் பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலுக்கு உத்தரவிடக்கூடிய அரசியலமைப்பு ரீதியான அதிகாரத்தை ஜனாதிபதி பெற்றுவிடுவார் என்பது கவனிக்கத்தக்கது. 

மாறிவிட்ட மனப்பான்மை
பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இனநெருக்கடிக்கு தீர்வுகாண்பதற்கான முயற்சிகளுக்கு இணங்கக்கூடியவையாக இருப்பது மூன்றாவது காரணமாகும்.எதிரணியில் உள்ள முக்கிய கட்சிகள் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் குறுகிய தேசியவாத நிலைப்பாடுகளை ஆதரித்துப் பேசாததற்கான விலையை செலுத்தன.அவை இனத்துவ விவகாரங்களை விடுத்து மற்றைய பிரச்சினைகளைப் பற்றியே பிரசாரம் செய்தன. 

இது இனநெருக்கடியை தீர்ப்பதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளை எதிரணியில் இருந்த அரசியல் கட்சிகள் பெரும்பாலும் எதிர்த்த பெருங்கேடான கடந்தகால அணுகுமுறையில் இருந்து விடுபடுவதற்கான ஆற்றலை அவை கொண்டிருக்கின்றன என்பதற்கான அறிகுறிகளை காட்டுகிறது. எதிரணி கட்சிகள் குறுகிய இனத்துவ தேசியவாத அரசியலில் ஈடுபடுவதும் சாத்தியமில்லை.ஏனென்றால் அவற்றுக்கு அது தேவையில்லை.இத்தடவை பொருளாதார வீழ்ச்சியும் மக்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகளுமே அவை பிரசாரப்படுத்தக்கூடிய பிரச்சினைகளாக இருக்கும். 

நாட்டில் அரசியல் அபிப்பிராயத்தின் இயல்பில் ஏற்பட்டிருக்கும் மாறுதலே நான்காவது காரணமாகும்.கடந்த வருடம் இடம்பெற்ற பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு நாட்டுக்கு தேவைப்படுவது அடிப்படைச் சீர்திருத்தங்களே என்ற ஒரு உணர்வு பொதுமக்கள் மத்தியில் காணப்படுகிறது.போராட்ட இயக்க காலப்பகுதியில் மக்கள் மத்தியில் பிரபல்யமாகியிருந்த ' முறைமை மாற்றம் '(System Change ) என்ற சுலோகத்தின் மூலம் இந்த உணர்வு வெளிப்பட்டது. 

பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கை அதாவது அரச நிதியை களவாடியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதுடன் அவர்களது சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படவேண்டும் என்பதும் போராட்ட இயக்க சுலோகங்களில் ஒன்று. இனத்துவ மற்றும் மத தேசியவாதத் திரைக்குப் பின்னால் மறைந்திருந்துகொண்டு கடந்த 74 வருடகாலமாக முன்னெடுக்கப்பட்ட தவறான ஆட்சிமுறை மற்றும் முறைகேடுகள் மீதும் போராட்ட இயக்கம் கவனத்தைச் செலுத்தியது.சகல இனத்துவ மற்றும் மத சமூகங்களினதும் பிரசைகளும் சமத்துவமான முறையில் நடத்தப்படவேண்டும் என்பதுடன் ஆதிகால சிந்தனைகளின் அடிப்படையில் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தியவர்கள் நிராகரிக்கப்படவேண்டும் என்ற சுலோகமும் முன்வைக்கப்பட்டது. 

இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வொனறைக் காணவேண்டியது நாட்டு மக்கள் சகலரும் மோதலின்றி ஒன்றாக வாழ்வதற்கு வகை செய்வதற்காக மாத்திரமல்ல, நீண்டகாலமாக தீர்கப்படாமல் இருக்கும் இந்த பிரச்சினையின் விளைவாக ஏற்பட்ட அரசியல் உறுதிப்பாடின்மையையும் வன்முறையையும் இல்லாமல் செய்வதற்கும் முக்கியமானதாகும்.நாட்டில் பொருளாதார முதலீடுகளுக்கு பெரிய முட்டுக்கட்டையாக உறுதிப்பாடின்மையும் வன்முறையும் இருந்துவந்தன. 

1977 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் சுதந்திர சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கை மாற்றமும் பெருமளவு சர்வதேச உதவிகளைக் கொண்டுவந்தன.மகாவலி திசைதிருப்பல் திட்டம் இதில் முக்கியமானது. பிரிட்டிஷ் மக்களினால் இலங்கைக்கு முற்றிலும் கொடையாக வழங்கப்பட்டதே விக்டோரியா நீர்த்தேக்கமாகும்.ஆனால், 1983 ஜூலையில் இடம்பெற்ற இன வன்செயல்கள் சர்வதேச முதலீடுகளுடனான பொருளாதார முன்னேற்றத்துக்கான வாய்ப்பை நிர்மூலஞ்செய்தன. 

அறகலயவின் கோரிக்கை 

இப்போது தேசிய பொருளாதாரத்தின் மீது முதலீட்டாளர்களின் நம்பிக்கைய கட்டியெழுப்புவதற்கு அவசியமான சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுக்காக இலங்கை இன்னமும் காத்துக்ககொண்டு நிற்கிறது.ஆனால் இந்த ஆதரவு, இலங்கை திருப்பிச் செலுத்தவேண்டிய கடன் கொடுப்பனவுகளில் ஒரு விகிதாசார அளவில் குறைப்பைச் செய்வதற்கு சீனா காட்டுகின்ற தயக்கத்தினால் தாமதமாகிறது.வங்குரோத்து அடைந்துவிட்ட நாடு ஒன்று பெரிய பொருளாதார வல்லமை கொண்ட நாட்டிடம் விடுக்கின்ற நியாயபூர்வமான வேண்டுகோளாக இது இருக்கின்ற நிலையில் சீனா ஒத்துழைக்காமல் இருப்பதற்கு வேறு புவிசார் அரசியல் மற்றும் மூலோபாய காரணங்களும் இருக்கக்கூடும்.இலங்கையின் வேண்டுகோளுக்கு இணங்கினால் தன்னிடம் கடன்பட்ட (இலங்கையை விடவும் வறுமையான )பல நாடுகள் விடுக்கக்கூடிய வேண்டுகோளுக்கும் இணங்கவேண்டிவரும் என்று சீனா நினைப்பதாக பொதுவாக நம்பப்படுகிறது. 

இந்த பின்னணியில் இலங்கை வேறு தரப்புகளிடம் இருந்து சர்வதேச உதவியை இலங்கை நாடி நிற்கிறது.நீண்டகால இனநெருக்கடிக்கு காணப்படக்கூடிய இணக்கத்தீர்வு

இலங்கைக்கு சர்வதேச சமூகத்தின் மத்தியில் நேர்மறையான ஒரு படிமம் ஏற்படுவதற்கு வழி வகுக்கலாம்.சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அனுசரணை வழங்க வெவ்வேறு கட்டங்களில் முன்வந்த இந்தியா, ஜப்பான்,நோர்வே,ஐக்கிய இராச்சியம்,அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் பாரதூரமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு ஆதரவை வழங்குவதற்கு ஆர்வப்படக்கூடும்.அந்த நாடுகளில் வாழ்கின்ற புலம்பெயர் தமிழ்ச்சமூகம் இலங்கையின் சார்பில் -- குறிப்பாக பெருமளவுக்கு கவனிக்கப்படாமல் இருக்கும் வடக்கு,கிழக்கு பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு -- ஆதரவுக் குரல் வலிமையான ஒரு சக்தியாக விளங்கமுடியும். 

ஆனால், பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் என்பது இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் காணமுடியாமல் இருக்கும் அம்சமாகும்.பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளிலும் இதே இடைவெளி இருக்கிறது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பில் இறுதியாக நிறைவேற்றிய தீர்மானத்தில் பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற போதிலும், பொருளாதாரக் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் பிரச்சினை புறக்கணிக்கப்படுகின்றது. 

போர்க்குற்றங்கள் தொடர்பான பிரச்சினையைப் பொறுத்தவரை,அவை கடந்த காலத்தில் இடம்பெற்றவை,தற்போது அவ்வாறான பிரச்சினை கிடையாது என்று கூறப்படமுடியும்.ஆனால் பொருளாதாரக் குற்றங்களைப் பொறுத்தவரை கடந்தகால செயல்கள் இப்போது மீண்டும் பெருமளவில் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது.இது ஏற்றுக்கொள்ளப்படமுடியாததாகும்.தேசிய நல்லிணக்கமும் அபிவிருத்தியும் நடைமுறை யதார்த்தங்களாக வேண்டுமென்றால் ஜனாதிபதியும் அரசாங்கமும் ஊழல் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களின் நலன்களில் மானசீகமான அக்கறையைக் காண்பிக்கவேண்டும்.