கலாநிதி ஜெகான் பெரேரா
நீர்ச்சறுக்கல் விளையாட்டில் ஈடுபடுபவர்கள் கடல் அலைகளைக் கையாளும் ஆற்றல் கொண்டவர்களாக இருக்கவேண்டும்.அலை எந்தளவுக்கு பெரியதாக இருக்கிறதோ அந்தளவுக்கு அவர்கள் உயரத்துக்கு செல்வார்கள். அலையில் இருந்து தப்பிக்க முயற்சிப்பவர்கள் அதன் கீழே மூழ்கிவிடுவார்கள். எதிரணி அரசியல் கட்சிகளினால் உருவாக்கப்படுகின்ற உள்ளூராட்சி தேர்தல்களுக்கான கோரிக்கை அலையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையாளுவார் என்றே தோன்றியது.சட்டப்படி இந்த தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் மாதமளவில் நடத்தப்படவேண்டியவையாக இருக்கின்றன.

இந்த தேர்தல்கள் ஆளும் கட்சி மீது வாக்காளர்கள் வைத்திருக்கும் குறைந்த மதிப்பை வெளிக்காட்டக்கூடிய சாத்தியம் இருக்கிறது.அவ்வாறு நடந்தால் ஜனாதிபதியின் கரங்கள் வலுப்படும். நாட்டைக் மீளக்கட்டியெழுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கு அவர்களை அவர் நிர்ப்பந்திக்கமுடியும்.உள்ளூராட்சி தேர்தல்களில் தனது கட்சிக்கு ஆதரவாகக் கூட பிரசாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கியிருக்கப்போவதாக ஜனாதிபதி முன்கூட்டியே அறிவித்துவிட்டார்.தேசிய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கே தனக்கு ஆணை வழங்கப்பட்டிருக்கிறது என்று அதற்கு அவர் காரணம் கூறுகிறார்.

பொருளாதார மீட்சி மீது கவனத்தைக் குவிப்பதில் ஜனாதிபதி காட்டும் அக்கறைக்கு அந்த பணியின் அவசரமும் அவசியமுமே காரணம்.பொருளாதாரம் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துகொண்டே போகிறது.கடந்த வருடம் 8 சதவீதத்தினால் சுருங்கிய பொருளாதாரம் புதிய வருடத்தில் சாதகமான வளர்ச்சிக்கு திரும்புவதற்கு வாய்ப்புக்கள் குறைவு. ஏற்றுமதி பொருளாதாரத்தின் செயற்பாட்டிலான மேம்பாடு மற்றும் வெளிநாடுகளில் வேலைசெய்யும் இலங்கையர்கள் அனுப்புகின்ற பணம் காரணமாக வெளிநாட்டு நாணய வருகையில் படிப்படியான அதிகரிப்புகள் மாத்திரமே இதுவரையில் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், பெரியளவிலான வெளிநாட்டு நாணய வருகைக்கு உட்கட்டமைப்புகளில் முதலீடும் நீண்டகால அடிப்படையிலான உற்பத்தி ஆற்றலும் அவசியம்.அது இனிமேல்தான் நடைபெறவேண்டியிருக்கிறது.வல்லமைபொருந்திய ஹெட்ஜ் நிதியாளர்களும் ஏனைய முதலீட்டாளர்களும் கடன் நிவாரணப் பேச்சுவார்த்தைகளில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் காரணத்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவியைப் பெறுவதற்கான செயன்முறைகள் தடைப்பட்டுப்போயிருப்பதாக கூறப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்படும் பட்ச்தில் பிரசார நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருப்பதற்கு ஜனாதிபதி எடுத்த முடிவு வெற்றிபெறுவதில் தனது அரசியல் கட்சிக்கு இருக்கக்கூடிய குறைவான வாய்ப்பக்கள் பற்றிய அவரின் மதிப்பீட்டை பிரதிபலிப்பதாகவும் இருக்கக்கூடும்.இறுதியாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஒரு ஆசனத்தைக் கூட வன்றெடுக்கவில்லை.உள்ளூராட்சி தேர்தல்களில் அந்த கட்சி சிறப்பாக செயற்பாட்டை ளெிக்காட்டுவதற்கான சாத்தியம் இல்லை.மக்கள் போராட்ட குழப்ப காலப்பகுதிக்கு பிறகு உறுதிப்பாட்டை ஏற்படுத்தியதற்காக சனத்தொகையில் வசதி படைத்த பிரிவினரே ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை பாராட்டுகிறார்கள்.

ஆனால், மீள்விக்கப்பட்ட இந்த உறுதிப்பாடு ஐக்கிய தேசிய கட்சிக்கான வாக்குகளாக மாறுவதற்கான சாத்தியத்துக்கு மக்கள் அனுபவிக்கின்ற பொருளாதார இடர்பாடுகள் இடமளிக்கப்போவதில்லை.

முன்னேற்றம் இல்லை
பழைய வருடத்தின் முடிவில் உறுதியளிக்கப்பட்ட சாதகமான நகர்வை புதுவருடம் இன்னும் கொண்டுவரவில்லை.இலங்கை அதன் 75 வது சுதந்திரதினத்தை கொண்டாடும்போது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பது என்ற ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் உறுதிமொழி நடைமுறை மெய்ம்மையாவதற்கான அறிகுறிகளைக் காணவில்லை.வடக்கு,கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற நடைமுறைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பொறுத்தவரையிலும் கூட முன்னேற்றம் இல்லை என்பது குறித்து பிரதான தமிழ் அரசியல் அணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டிருக்கிறது. 

நிலப்பிரச்சினை ஓய்வின்றி தொடருகிறது.தமிழர்களும் முஸ்லிம்களும் விவசாயம் செய்துகொண்டிருந்த அரச நிலங்கள் சுவீகரிக்கப்பட்டு கம்பனிகளுக்கு அல்லது சிங்கள மக்களுக்கு வழங்கப்படுகிறது.அந்த பகுதிகளில் கண்டெடுக்கப்படும் பௌத்த தொல்லியல் பொருட்கள் முரண்பாடுகள் மூளும் இடங்களாக மாறுகின்றன.தமிழர்களும் முஸ்லிம்களும் வாழ்ந்த பகுதிகளுக்குள் சிங்களவர்கள் பிரவேசிக்கும்போது பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

போர்க் காயங்களும் புரையோட விடப்படுகின்றன.பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிகள் மற்றும் காணாமல்போனோரின் கதி பற்றிய பிரச்சினைகள் தீர்கப்படாமல் தொடருகின்றன.இந்த பிரச்சினைகள் தமிழர்களைப் பொறுத்தவரை அடையாள முக்கியத்துவமுடையவை.அவற்றை கையாளுவதாக உறுதியளித்துவிட்டு பிறகு அரசாங்கம் கைவிடுவது அதன் மீதான நம்பிக்கையை மேலும் அரித்துவிடும்.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியின் உறுதிமொழிகளை ஒருவகை நம்பிக்கையுடன் நோக்கியது. அரசாங்கம் அந்த உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறும்போது கூட்டமைப்பும் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழக்கும் நிலை ஏற்படும்.இது அவர்கள் எதிர்நோக்குகின்ற ஒரு முக்கிய பிரச்சினையாகும்.தங்களது மக்களின் நம்பிக்கையை பேணவேண்டிய அவசியம் கூட்டமைப்புக்கு இருக்கிறது. அதனால்தான் அவர்கள் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகுவது குறித்து சிந்திக்கவேண்டிவரும் என்று எச்சரிக்கை செய்தார்கள்.

உள்ளூராட்சி தேர்தல்களை ஒத்திவைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி புதுவருடத் தொடக்கத்தின் இன்னொரு கெடுதியான அறிகுறியாகும்.அவுஸ்திரேலியா போன்ற சில நாடுகளில் மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை பொதுத்தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.அமெரிக்கா போன்ற வேறு நாடுகளில் காங்கிரஸின் அரைவாசி ஆசனங்களுக்கு இரு வருடங்களுக்கு ஒரு்தடவை பொதுத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. தீர்மானங்களை மேற்கொள்வதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்களுடன் தாங்கள் இணங்கிக்கொள்கிறார்களா இல்லையா என்பதை வெளிக்காட்டவும் அதிருப்தி ஏற்பட்டால் புதிய பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கும் வாய்ப்பைக் கொடுப்பதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

பொருளாதாரத் துன்பங்கள் காரணமாக மக்கள் பெரும் வேதனையும் விரக்தியும் அடைந்திருப்பதால் அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக தேர்தல்கள் நடத்தப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடமுடியாது.உள்ளூராட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டால் மக்கள் தங்களின் விரக்தியை வேறு மார்க்கங்களில் வெளிக்காட்டக் கூடும்.அது நிச்சயமாக அமைதிவழி மார்கமாகத்தான் இருக்கும் என்று சொல்லமுடியாது.

சவாலை ஏற்றுக்கொள்ளல்
ஜனாதிபதியின் முரண்பாடான அறிவிப்புகள் மற்றும் செயற்பாடுகள் மூலமாக தேர்தல்கள் தொடர்பில் அரசியல் சமுதாயத்திற்குள் நிலவுகின்ற முரண்பாடுகளையும் அவர் மீது பிரயோகிக்கப்படும் நெரக்குதல்களையும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.முன்னர் ஐந்து தடவைகள் பிரதமராக இருந்தபோது அவரின் தலைமைத்துவம் மென்மையான அணுகுமுறை கொண்டதாக இருந்தது. ஆனால், அதிகாரத்தில் இல்லாதபோது அவர் ஆதரித்த மக்கள் போராட்ட இயக்கத்தை ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் கொடுங்கரம் கொண்டு அடக்கியொடுக்கினார். போராட்ட இயக்கத்துக்கு தலைமத்துவத்தை வழங்கியவர்களை அரசாங்கம் தொடர்ந்து கைதுசெய்கின்ற விதம் எதிர்காலத்தில் அதே போன்ற போராட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடக்கூடியவர்களுக்கு ஒரு பயமுறுத்தல் செய்தியைச் சொல்கிறது.

போராட்டக்காரர்களை தண்டித்து முடங்கச் செய்வதற்கு சட்டம் பயன்படுத்தப்படுகிறது.ஆனால்,வன்முறையில் ஈடுபட்ட கும்பல்களையும் பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டப்படுபவர்களையும் அரசாங்கம் வேறு விதமாக கையாளுகிறது.கொள்வனவு செயற்பாடுகளில் உயர்மட்டத்தில் கடுமையான ஊழல் தொடருவதற்கு அனுமதிக்கப்படுகிறது.இது மன்னிக்கமுடியாததாகும்.

மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த செல்வாக்கினாலோ அல்லது அவர்கள் வாக்களித்ததனாலோ விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வரவில்லை. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது அரசாங்கம் முன்வைத்த சவாலை ஏற்றுக்கொள்ள முன்வந்த காரணத்தினாலேயே அவர் ஜனாதிபதியானார்.மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி போராட்ட இயக்கத்துக்கு முகங்கொடுக்கமுடியாமல் பதவியை செய்ததையடுத்து ஆளும் கட்சி விக்கிரமசிங்கவை அதன் சிறந்த தெரிவாக்கியது.

ஊழல் மோசடிகளினாலும் தவறான ஆட்சிமுறையினாலும் நாட்டின் பொருளாதாரத்தை நிலைகுலையச்செய்த ஆளும் கட்சியின் தோழமையுடன் அதிகாரத்தில் இருப்பதை விடவும் ஜனாதிபதிக்கு சவால் மிக்க முக்கியமான பணி இருக்கிறது.அந்த பணியை நிறைவேற்றுவதற்கு அவர் கட்சி அரசியலுக்கும் தனது சொந்த நலன்களுக்கும் அப்பால் நின்று நாட்டின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு தனது ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களை பயன்படுத்தவேண்டும்.

நாட்டின் 75 வது சுதந்திர தினமளவில் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணப்போவதாக ஜனாதிபதி உறுதிபூண்டபோது தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைலரம் குறித்து ஒரு மதிப்பீட்டை அவர் செய்திருந்தார் எனபதை விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருந்தது. நாட்டினதும் மக்களினதும் நல்வாழ்வுக்காக ஒரு தொலை நோக்கை அவர் வெளிப்படுத்தினார்.அதற்காக அவரைப் பாராட்டவேண்டும்.இப்போது அவர் மதிப்பீடுகளுக்கு அப்பால் சென்று தேசிய நலனை மனதிற்கொண்டு செயலில் இறங்கவேண்டும்.

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே தனக்குரிய ஆணை என்ற அடிப்படையில் தனது கட்சிக்காக உள்ளூராட்சி தேர்தல்களில் பிரசாரங்களில் ஈடுபடப்போவதில்லை என்ற ஜனாதிபதியின் அறிவிப்பு அறிவுஜீவிகள் சமூகமும் சர்வதேச சமூகமும் அவரிடம் காண்கின்ற உயர்ந்த சிந்தனையின் இன்னொரு அறிகுறியாகும்.இருள்சூழ்ந்த இன்றைய காலகட்டத்தில் நாட்டுக்கு தேவைப்படுவது அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவதற்காக அதுவரை காலத்தைக் கடத்துவது பற்றி சிந்திக்கின்ற ஒரு தலைமைத்துவம் அல்ல, தன்னிடம் இன்று இருக்கின்ற அதிகாரத்தை நேற்றைய, இன்றைய, நாளைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பயன்படுத்தக்கூடிய தலைமைத்துவமேயாகும்.